::::: MINISTRY OF FINANCE INITIATIVES 11TH BI-PARTITE PROCESS ::::: ::::: HAPPY PONGAL :::::

Tuesday, February 16, 2016

தள்ளாடும் பொதுத்துறை வங்கிகள்

கடந்த வாரத்தின் தலைப்பு செய்தியாக பங்குச் சந்தையின் சரிவு இருக்கலாம். ஆனால் அவ்வளவு பெரிய சரிவை உண்டாக்கியதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு மிக முக்கியமானது. கடந்த வாரம் பல பொதுத்துறை வங்கிகளின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியானது. இதில் பெரும்பாலான வங்கிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தன. வாராக்கடன்களுக்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்ததன் காரணமாக நஷ்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது.
இந்த நிலைமையில் கடந்த மூன்று வருடங்களில் பொதுத்துறை வங்கிகள் 1.14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன. கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் எஸ்பிஐ அதிகபட்சமாக 21,313 கோடி ரூபாய் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அலகாபாத் வங்கி உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகள் கடந்த நிதி ஆண்டில் மட்டும் கணிசமான தொகையை தள்ளுபடி செய்திருந்தன.
இதற்கிடையே செப்டம்பர் 2015 நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ. 3,00,743 கோடி என்ற நிலையை தொட்டது. கடந்த மார்ச் மாதத்தில் ரூ. 2.67 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையில் இருந்து ஆறு மாதங்களில் வாராக்கடன் கணிசமாக அதிகரித்துள்ளது.
வாராக்கடன் நிலைமை குறித்து அதிருப்தி தெரிவித்த ரிசர்வ் வங்கி, 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்களது நிதி நிலை அறிக்கையில் உள்ள சுமைகளை நீக்குவதற்கு அவகாசம் கொடுத்திருந்தது. இந்த பிரச்சினையை பேண்டேஜ் போட்டு மறைக்க முடியாது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன். இது மட்டுமல்லாமல், துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ராவும் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்தே பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனுக்காக அதிக தொகையை ஒதுக்க ஆரம்பித்தன. இதனால் பல வங்கிகள் நஷ்டத்தை சந்தித்தன.
source: Hindu Tamil

No comments:

Post a Comment